Sunday, April 19, 2009

வருண் காந்தியை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் கும்பலையே தடை செய்

Written by புதிய ஜனநாயகம் Wednesday, 08 April 2009 09:46
புதிய ஜனநாயகம் 2009
"நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்.....'' என்றொரு பழமொழி சொல்வார்களே, அதற்கு முற்றிலும் பொருத்தமானது பாரதீய ஜனதா கட்சி. அந்தக் கட்சி எவ்வளவுதான் தன்னை நவீனமாகக் காட்டிக் கொண்டாலும், அந்தக் கட்சியின் தலைவர்கள் எவ்வளவுதான் மேன்மக்களாக இருந்தாலும், அக்கட்சியாலும் அதன் தலைவர்களாலும் முஸ்லீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்காமல் அரசியல் வாழ்வில் ஒரு நொடிப்பொழுதைக்கூடக் கழிக்க முடியாது.
உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பிலிபிட் மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வருண் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் அத்தொகுதியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ""இது (காங்கிரசின் சின்னமான) கையல்ல இது (பா.ஜ.க.வின் சின்னமான) தாமரையின் சக்தி; இது தேர்தலுக்குப் பிறகு முஸ்லீம்களின் தொண்டையை அறுத்து விடும்'' (ஆதாரம்: தி ஹிந்து, 24.03.2009, பக்.10) எனப் பேசியதோடு, ""சுன்னத்'' செய்வது போன்ற செய்கையையும் காட்டி முஸ்லீம்களை இழிவுபடுத்தியிருக்கிறான். மேலும், ""யாராவது ஒருவர் இந்துக்களை நோக்கி ஒரு விரலை நீட்டினாலும், அந்தக் கையை வெட்டுவேன் என கீதையின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்'' என்றும் (ஆதாரம்: தி ஹிந்து, 18.03.2009, பக்.1) வருண் காந்தி ஊளையிட்டுள்ளான்.

நேரு குடும்பத்தின் வாரிசான வருண் காந்தி, பார்ப்பதற்கு வெள்ளையும் சொள்ளையுமாகத் தெரிந்தாலும், அவன் வாயைத் திறந்தாலே முஸ்லீம்களுக்கு எதிரான வக்கிரமும், இந்து மதவெறிக் கொழுப்பும்தான் பொங்கி வழியும் எனப் பல பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவனது இந்து மதவெறி பிடித்த பேச்சைப் பத்திரிகையாளர்கள் ஒளி ஒலிப்பதிவு செய்ய முயன்றபோதெல்லாம் இந்து மதவெறிக் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். எனினும், இத்தாக்குதல்களுக்கு அஞ்சாமல் தனியார் தொலைக்காட்சியைச் Nசுர்ந்த நிருபர் ஒருவர், மிகவும் இரகசியமான முறையில் வருண் காந்தியின் பொதுக்கூட்ட பேச்சை ஒளிப்பதிவு செய்து, கவிஞன் என்ற போர்வையில் உலவி வரும் அம்மிருகத்தை இந்திய மக்களின் முன் அம்பலப்படுத்திவிட்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் வருண் காந்தியின் பொதுக்கூட்ட உரை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக் குற்றஞ்சுமத்தி, இதற்கு விளக்கம் அளிக்குமாறு வருண் காந்திக்கும் பா.ஜ.க.விற்கும் தாக்கீது அனுப்பியது. ""தனது பொதுக்கூட்ட உரையை யாரோ திருத்தி வெளியிட்டு உள்ளதாகவும், இது தனது எதிரிகளால் பின்னப்பட்ட சதி'' என்றும் விளக்கம் கொடுத்து, வருண் காந்தி தப்பித்துக் கொள்ள முயன்றான். இந்தியத் தேர்தல் ஆணையம் வருண் காந்தியின் பித்தலாட்ட விளக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதோடு, அவன் மீது மூன்று குற்ற வழக்குகளைத் தொடுத்திருக்கிறது. இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உ.பி. உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டதோடு, இந்தக் குற்ற வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
"வருண் காந்தியை பிலிபிட் தொகுதியின் வேட்பாளராக நிறுத்த வேண்டாம்'' எனத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதை, பா.ஜ.க. ஒதுக்கித் தள்ளிவிட்டதன் மூலம் அக்கட்சி வருண் காந்திக்குக் கொம்பு சீவிவிட்டுள்ளது. அத்வானி இப்பிரச்சினை பற்றி மௌனம் சாதிப்பதன் மூலம் வருண் காந்திக்கு ஆதரவு காட்டி வருகிறார். ராஜ்நாத் சிங் போன்ற அக்கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையம் எங்களுக்கு எப்படி ஆலோசனை வழங்கலாம் எனக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவசேனை, விஸ்வ இந்து பரிசத் போன்ற வானரக் கூட்டங்களோ வருண் காந்தி பேசியதில் ஒரு தவறும் இல்லை என வம்படி செய்து வருகின்றன.
"வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம்'' எனத் தேர்தல் ஆணையம் வழங்கிய ஆலோசனையை, ஏதோ வருண் காந்தியின் குடியுரிமையையே பறித்து விட்டது போல ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஊதிப் பெருக்கி வருகிறது. இப்பிரச்சினையில் இந்து மதவெறி அமைப்புகள், அவற்றின் ஆதரவாளர்கள் ஆகியோரின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை தினமணி தலையங்கமாக (25.03.2009) வடித்துக் கொடுத்துள்ளது.
"வருண் காந்தியின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்படும் முன்பே, அவரை வேட்பாளராக நிறுத்தாதீர்கள் எனத் தேர்தல் ஆணையம் ஆலோசனை கூறுவது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. .......ஜகதீஷ் டைட்லர் போன்ற சீக்கியர் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சர்களாகும்போது, வருண் காந்திக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்குகின்றன ஊடகங்கள்.....'' என தினமணி புலம்பித் தீர்த்துள்ளது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சில முசுலீம்கள் நிரபராதிகள் எனத் தெரிந்திருந்தும், அவர்களுக்குப் பிணை கூட வழங்காமல், விசாரணை என்ற பெயரில் 910 ஆண்டு காலம் அவர்கள் சட்டவிரோதமாகத் தண்டிக்கப்பட்ட பொழுது அக்குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட பல முசுலீம்கள், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை காலத்தைவிட அதிகமான ஆண்டுகளைச் சிறையில் கழிக்க நேரிட்ட பொழுதெல்லாம், தினமணிக்கு இப்படிப்பட்ட "நியாய' உணர்ச்சி பொங்கி வழிந்ததில்லை.
"தேர்தலுக்குப் பிறகு முசுலீம்களின் தொண்டைக் குழியை தாமரை அறுக்கும் எனப் பேசிய வருண் காந்திக்கு வேட்பாளராக நிற்கும் தகுதியுண்டா?'' என அறத்தின் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்க முடியாத அளவிற்கு தினமணியின் கண்களை இந்துமதவெறி மூடி மறைக்கிறது.
சீக்கிய இனப்படுகொலையில் ஈடுபட்ட காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஜகதீஷ் டைட்லர் மட்டுமல்ல் பல முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களுக்கும், படுகொலைகளுக்கும் தளகர்த்தாக்களாகச் செயல்பட்ட அத்வானி, நரேந்திர மோடி, கல்யாண் சிங், பால் தாக்கரே உள்ளிட்ட பல இந்து மதவெறிக் கிரிமினல்களும் கூடத்தான் சட்டத்தால் தண்டிக்கப்படாததோடு, அரசின் பாதுகாப்போடு சுற்றி வருகிறார்கள். "அவர்களையும் தேர்தலில் போட்டியிடத் தடை செய்; வருண் காந்தியையும் தடை செய்'' என தினமணி கூறியிருந்தால், அதனின் நடுநிலைமையை மெச்சியிருக்கலாம். ஆனால், தினமணியோ ""நீ மட்டும் யோக்கியமா?'' என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம், இந்து மதவெறிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு நியாயம் கற்பிக்க முயலுகிறது.
பா.ஜ.க., "வருண் காந்தியின் பேச்சு கட்சியின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை'' எனத் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறதாம். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது என்பதற்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறெதுவும் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பலின் பிறப்பும் சரி, அவ்வமைப்புகளின் இயக்கமும் சரி, ஆதிக்க சாதிவெறி முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியலைத் தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. அத்வானி, நரேந்திர மோடி போன்ற அக்கட்சியின் ""தீவிரவாத''த் தலைவர்கள் மட்டுமல்ல, தவறான கட்சியில் இருக்கும் சரியான நபராக திராவிடக் கட்சிகளால் முன்நிறுத்தப்பட்ட ""மிதவாதி'' வாஜ்பாயியும், முசுலீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்குவதில் சளைத்தவரல்ல.
வருண் காந்தியாவது தனது பேச்சை யாரோ திருத்தி வெளியிட்டிருப்பதாகத் தான் கூறி வருகிறார். ஆனால், வாஜ்பாயியோ புளுகுவதில் எல்லோரையும் மிஞ்சியவர். வாஜ்பாயி பிரதமராக இருந்த பொழுது, குஜராத் கலவரத்தையடுத்து நடந்த பா.ஜ..கட்சியின் கோவா மாநாட்டில் முசுலீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்கினார். அவரது பேச்சு நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குள்ளானபொழுது, ""தான் அப்படி பேசவில்லை'' எனப் புளுகியதோடு, தனது பேச்சை தானே திருத்தி ஒரு ஒலித்தகட்டை வெளியிட்டு, நாடாளுமன்றத்தையே ஏமாற்றினார். இப்படிப்பட்ட யோக்கியசிகாமணிகள் நிறைந்த அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.
நியாயமாகப் பார்த்தால், சுதந்திரத்துக்கு முன்னும், பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் தலைமை தாங்கி நடத்திய முசுலீம் எதிர்ப்பு கலவரங்கள், படுகொலைகளுக்காக, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்டு அதன் சகோதர அமைப்புகள் அனைத்தையும் அரசியல் அரங்கிலோ, பண்பாட்டு அரங்கிலோ செயல்பட முடியாதவாறு தடை செய்திருக்க வேண்டும். அக்கட்சியின் "தேசிய'த் தலைவர்கள் தொடங்கி உள்ளூர் ராம.கோபாலன் வரை, இந்து மதவெறி பாசிசக் கும்பலின் தளபதிகள் பலரின் குடியுரிமைகள் அனைத்தையும் பறித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனையோ வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், இந்து மதவெறிக் கும்பலை எதிர்கொள்வதில், "மதச்சார்பற்ற' இந்திய அரசின் சட்டங்களோ மொன்னையாக இருக்கின்றன. அச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் பெற்ற போலீசு நீதிமன்றங்கள் இரண்டும் இந்து மதவெறிக் கும்பலின் இளைய பங்காளிகளாக நடந்து வருகின்றன.
தேர்தல் ஆணையம் தொடுத்துள்ள வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி தில்லி உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார், வருண்காந்தி. இவ்வழக்கில் அவருக்குப் பிணை வழங்கத் தனக்கு அதிகாரம் உள்ளதா என்பதைக் கூட ஆராயாத தில்லி உயர்நீதி மன்றம், மார்ச் 27 முடிய வருண் காந்திக்குத் தற்காலிகப் பிணை வழங்கி, சுர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இதே போன்று ஒரு வழக்கு சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவுக்கு எதிராக நடந்த பொழுது, அவருக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய சிறை தண்டனையைக் கூட அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாறாக, ""பால் தாக்கரே ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும், ஓட்டுப் போடவும் கூடாது'' எனத் தடை விதித்து, எறும்புக் கடியைப் போல ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய அரசின் மதச்சார்பின்மை கிழிந்து கந்தலாகி விட்டது என்பதை குஜராத் முசுலீம் படுகொலையின் பின் உலகமே தெரிந்து கொண்டு விட்டது. இப்படிப்பட்ட நிலையில், வருண் காந்திக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் தொடுத்துள்ள வழக்கு, இந்திய அரசின் நிர்வாணத்தை மறைக்கும் சல்லாத் துணியாகத்தான் பயன்படுமேயொழிய, அதற்கு மேல் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது.
"நேரு குடும்பத்தில் பிறந்த வருண் காந்தி இப்படிப் பேசலாமா?'' என்பது சில அப்பாவிகளின் அங்கலாய்ப்பு. வருண்காந்தியின் "தோப்பனார்'' சஞ்சய் காந்தி, அவசர நிலை காலத்தில் முசுலீம்களுக்கு எதிராகப் போட்ட ஆட்டமெல்லாம், ஆர்.எஸ்.எஸ். கும்பலையே கொஞ்சம் அசர வைத்திருக்கும். தலைநகர் தில்லியின் துருக்மான் கேட் பகுதியிலுள்ள முசுலீம் குடியிருப்புகளைச் சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியதில் தொடங்கி முசுலீம் ஆண்களுக்கு வலுக்கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தது உள்ளிட்டு, சஞ்சய் காந்தி மீது சுமத்தப்பட்ட பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டன. அப்படிப்பட்ட கிரிமினலின் தப்பாத வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறான், வருண் காந்தி.
குப்பன்
http://www.tamilcircle.net/

No comments:

Post a Comment